இன்று திங்கட்கிழமை உலக தங்க சந்தையில் தங்கத்தின் விலை புதிய வரலாற்றுச் சாதனையை எட்டியது.
சமீப நாட்களில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றங்கள் மற்றும் கொள்கை சார்ந்த அதிர்வுகள் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளாக கருதப்படும் தங்கம் போன்ற சொத்துகளுக்கு அதிகம் திரும்பியதே இந்த அதிரடி உயர்வுக்குக் காரணம் என ஊகிக்கப்படுகிறது
LSEG தரவுகளின்படி, ஸ்பாட் தங்கம் 2% உயர்ந்து ஒரு அவுன்சுக்கு $4,600 ஐ முதல் முறையாக கடந்தது. பின்னர் சிறிதளவு சரிவடைந்தாலும், இந்த ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 6% உயர்ந்துள்ளது.அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) தலைவர் ஜெரோம் பவல் தொடர்பான விசாரணை மற்றும் அதனால் மத்திய வங்கியின் தலைமையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள், சந்தையில் புதிய கொள்கை அபாயங்களை உருவாக்கியுள்ளன.
குறிப்பாக, அவர் பதவி விலகி, வட்டி விகிதக் குறைப்புக்கு ஆதரவான புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தங்கத்திற்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
வட்டி விகிதங்கள் குறையும் போது, வட்டி வருமானம் தராத தங்கத்தை வைத்திருப்பதற்கான செலவு குறைவதால், தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் ஆர்வம் இயல்பாகவே அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே தற்போதைய சந்தை சூழலில் தங்கம் தொடர்ந்து உச்ச நிலைகளைத் தொடுகிறது என ஊகிக்கப்படுகிறது.