
மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதன் மூலம் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் ஒரு கூட்டுப் பொறிமுறையின் கீழ் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
11.07.2025 காலை ஹம்பந்தோட்டை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஹம்பந்தோட்டை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
விவசாயம், மீன்பிடி, சுகாதாரம், கல்வி, கிராமிய வீதி, காணி, நீர்ப்பாசனம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் வெற்றி குறித்து ஆராயப்பட்டதோடு மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவன மட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிஒதுக்கீடுகள், மற்றும் அந்த நிதியைப் பயன்படுத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-07-11